Pages

April 7, 2011

பழையது

அவர்களுக்கு பழையது பிடிக்கும்.....
பழைய சாதத்தின் நீராகாரம் -
உடலுக்கு நல்லதாம்
பழைய வெங்காய சாம்பார் -
நாக்குக்கு ருசியாம்
பழைய இட்லியின் உப்புமா - 
காலை சிற்றுண்டி எளிதாக
 பழைய பாடல்கள் -
அமைதியாய் உறக்கம் தழுவ
பழைய கதைகள் -
குழந்தைகள் கேட்க
பழைய நினைவுகள் -
மனதை வருடி சுகம் தர
பழைய நகைகள் -
மற்றவரின் கண்ணை கவர
பழைய மர பர்னிச்சர்கள் -
வீட்டை அழகுபடுத்த
அழகும் குன்றி நலமும் குன்றியது
கால்கள் தளர்ந்தது
கை கொடுத்த கைக்கு இன்று
நடுக்கம் வந்தது
கண்ணின் ஒளி மங்கியது
ஓய்வூதியமும் இல்லை உற்றதுணையும் பிரிந்திட  
 நானும் பழயதானேன்  - என்னைப் போற்ற ஆளில்லை  
இதோ என்னைபோன்றோர் குவிக்கப்பட்ட
அந்தக்குவியலுக்குள்  நானும்
இறங்கும் இடம்  எதிர்பார்த்து காத்திருக்கேன்  
விடைகொடுத்து அனுப்பிவைக்க
புதிய சொந்தங்களின்  சுற்றத்தோடு
எழுதிய மையின்  ஈரம் விழிகளின் ஓரம்.........
 எழுதுகோல் கை நழுவ, பெருமூச்சில் தலைசாய்ந்து
எழுதிய இறுதிக்  கவிதையை முத்தமிட்டபடி 
இறங்கும் இடத்திலிருந்து தொடர்கிறது அவரின் புதுப்பயணம் -
யாரும் கண்டிராத சொர்கத்தை நோக்கி
துணை இல்லாப்  புதுப்பயணம் - ஒரு புனிதப் பயணம்